5 June 2011

அரிசி வாங்கலயோ... அரிசி...


               ஜுன் ஒன்றாம் தேதி ரேசனில் அரிசி போட்டார்கள். இதற்கு முன்னர் அரிசியுடன் சேர்த்து கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சேமியா இவற்றுள் ஏதேனும் ஒன்றை ரூபாய் 30 க்கு வாங்கினால் மட்டுமே அரிசி கொடுத்திருக்கிறார்கள். அதிலும் 20 கிலோ அரிசியில் 5 கிலோவும் 35 கிலோ அரிசியில் 10 கிலோவும் புழுத்துப்போன அரிசியைத்தான் தந்திருக்கிறார்கள். அந்த அரிசியை பறவைகூடத் தீண்டாது. அந்த அரிசியை வேண்டாம் என்று சொன்னால் 5 கிலோவுக்கு 5 ரூபாயும் 10 கிலோவுக்கு 10 ரூபாயும் திருப்பித் தந்திருக்கிறார்கள். ஆனால் பில்லில் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்கள். இப்படி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் குறைந்தது 5 கிலோவை ஆட்டயைப் போட்டு அதில் ஒரு கிலோ அரிசி ரூபாய் 5 க்கு வெளி இடங்களில் விற்று விடுவார்கள். மொத்தம் 820 குடும்ப அட்டைகள். இதன் மூலம் மாதா மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதித்திருப்பார்கள். ஆனால் இந்த மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசியை முழுமையாகத் தந்தார்கள். மேற்படி பொருட்கள் எதுவும் வாங்குவதற்கு நிர்பந்திக்கப்படவில்லை. அரிசி இந்த மாதம் பரவாயில்லை ரகம். ஏனென்றால் அரிசியில் குமட்டும் ஸ்மெல் இல்லை.

              அடுத்த இரண்டு நாட்கள் சீனி போட்டர்கள். 1 கிலோ சீனி வாங்கியவர்களிடம் மட்டும் சில்லறை இல்லையென்று சொல்லி ரூ.13.50 க்குப் பதிலாக ரூ.14 வசூலித்தார்கள். சீனியுடன் வழக்கமாக ரூ.13 மதிப்பிலான தேயிலை பாக்கெட்டை திணிப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படித் திணிக்கவில்லை.

                 நான்காவது நாள் மண்ணெண்ணெய் ஊற்றினார்கள். ஒரு குடும்ப அட்டைக்கு 3 லிட்டர். சில்லறைக்காக ரூ.34.50 ஐ ரூ.35 ஆக்கினார்கள் (இதன் மூலம் மட்டும் இன்றைய கமிஷனாக ரூ.200 கிடைத்திருக்கும்). இத்துடன் ரூ.10 மதிப்பிலான டிடர்ஜன்ட் சோப்பையும் திணித்து மொத்தமாக ஒரு குடும்ப அட்டைக்கு 45 வசூலித்தார்கள். வழக்கமாக பயன்படுத்தும் உருளை வடிவ லிட்டர் அளவைக்குப் பதிலாக கூம்பு வடிவ அளவியினைப் பயன்படுத்தினார்கள். மொத்தம் 400 குடும்ப அட்டைகள் பதியப்பட்டது. 380 குடும்ப அட்டைகளுக்கு  மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட்து. அத்துடன் மண்ணெண்ணெய் தீர்ந்து போனதால் மீதம் 20 குடும்ப அட்டைகளுக்கு அடுத்த தவணையின் போது மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று சமாதனம் கூறி அனுப்பி வைத்தனர். கூட்டம் கலைந்த பின்னர் பேக்கர் பேசத் தொடங்கினார், “ஒரு பேரல் 200 லிட்டர்னு 6 பேரல்ல மொத்தம் 1200 லிட்டரு. எப்பவுமே ஒரு பேரல்ல 10 லிட்டர் கம்மியாதான் இருக்கும். பங்க்ல இருந்தே அப்டித்தான் அனுப்புவாங்க. இன்னைக்கி கூம்பு வச்சி ஊத்துனதுனாலதான் 60 லிட்டர் அடியாயிருச்சி. இல்லனா உருளைய வச்சி ஊத்தி ஒரு கார்டுக்கு 250 மில்லி அடிச்சி அத மத்த கார்டுகளுக்கு ஊத்தி பத்தாக்கொற இல்லாம 400 கார்டுக்கும் மேட்ச் பன்னிருவோம். இப்ப 20 கார்டுக்கு துட்டு வாங்கியாச்சு, ஆனா மண்ணெண்ண கொடுக்கல. 15-ந்தேதிக்கப்புறம் இன்னும் 400 பேரு வருவாங்க அவங்களுக்கும் கொடுக்கனும் இவங்களுக்கும் கொடுக்கனும். நான் என்ன செய்ய? மறுபடியும் உருளைய எடுத்தாதான் ஊத்த முடியும். அரிசி, சீனி இதெல்லாம் 100% ஸ்டாக் கொடுக்காங்க. ஆனா மண்ணெண்ண மட்டும் 80% தான் கொடுக்காங்க. அதிகாரிகளுக்கே தெரியும் மண்ணெண்ணய நாங்க அஜஷ் பன்னித்தான் கொடுப்போம்னு!”

அடுத்த மாசம் அரிசி ஃப்ரியா குடுப்பியளா? இல்ல மாவு வாங்குனாத்தான் அரிசி குடுப்பியளா?”

அந்த அம்மாகிட்ட நாளைக்கே எந்த கம்பனிகாரனாவது பெட்டிய கொடுத்துட்டு, இங்க வந்து மாவ எறக்குனாம்னா நாங்க அத வித்துதான ஆகனும்?!”

அதானே!”


சில கேள்விகள் :

* 35 கிலோ அரிசி பெற்று வரும் பெரும்பாலானவர்கள் எல்லாம் பெற்றவர்களாகவே உள்ளனர். தகுதியானவர்களுக்கு 20 கிலோ அரிசி கூட சரிவர கிடைப்பதில்லை. மீண்டும் அரசு இதில் தலையிட்டு தகுதியானவர்களைக் கண்டறிவார்களா?

* 50 பைசா சில்லறை திருட்டைத் தடுக்க ஏதும் வழிகள் உண்டா?

* தகுதியுடைய 100% குடும்ப அட்டைதார்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்வார்களா?

* அத்தியாவசிய பொருட்ளை வாங்கும் போது கட்டாயமாக வேறு சில பொருட்களை(சோப்பு, ஷாம்பூ…)யும் திணிப்பதைத் தடுக்க இயலுமா?

* இது குறித்து புகார் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை இதுநாள் வரை கண்டும் காணாமல் இருந்தது போல் இருப்பார்களா?

யாராவது பதில் சொல்லுங்களேன்…. ப்ளீஸ்….